குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஊட்டி, கோத்தகிரியில் கடையடைப்பு போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஊட்டி, கோத்தகிரியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
ஊட்டி,
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் முஸ்லிம்கள் நடத்தி வரும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இறைச்சி கடைகள், ஏல மண்டிகள், பழக்கடைகள் உள்பட என 40 சதவீத கடைகள் மூடப்பட்டு இருந்தன. பிங்கர்போஸ்ட்டில் முஸ்லிம்கள் நடத்தி வரும் கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடந்தது. ஊட்டியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சரவணன், திருமேனி மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோத்தகிரியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடைகள் அடைக்கப்பட்டன.
இதேபோன்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கூடலூரில் மாலை 3 மணிக்கு கண்டன பேரணி நடைபெற்றது. பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு புறப்பட்டு ராஜகோபாலபுரம், பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு, சுங்கம் ஐந்துமுனை சந்திப்பு சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்கள் வழியாக காந்திதிடலை வந்தடைந்தது. தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பேரணியில் கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, தி.மு.க. நிர்வாகிகள் ராஜேந்திரன், லியாகத்அலி, காங்கிரஸ் கோஷிபேபி, கே.பி.முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சகாதேவன், அ.ம.மு.க. சையத்அனூப்கான் உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் மத்திய, மாநில அரசுளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக பேரணியையொட்டி கூடலூரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.