ஊட்டி மலைரெயில் பாதையில், தண்டவாள சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களை துரத்திய காட்டுயானைகளால் பரபரப்பு
ஊட்டி மலைரெயில் பாதையில் தண்டவாள சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களை காட்டுயானைகள் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர்,
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து, இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின் றனர். மலைரெயில் பாதையின் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகின்றன. அந்த வனப்பகுதிகளில் காட்டுயானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது மலைரெயில் பாதையில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று மலைரெயில் பாதையில் ஹில்குரோவ் ரெயில் நிலையம் அருகில் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு குட்டியுடன் 3 காட்டுயானைகள் உலா வந்தன. இதை கண்ட ஊழியர்கள் பீதியில் உறைந்தனர். பின்னர் திடீரென காட்டுயானைகள், ரெயில்வே ஊழியர்களை துரத்தின. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அங்கிருந்து தப்பி ஓடினர். மேலும் கையில் வைத்திருந்த இரும்பு கம்பிகளை கொண்டு தண்டவாளத்தில் தட்டியபடி ஒலி எழுப்பினர். இதையடுத்து காட்டுயானைகள் அங்கிருந்து சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.