கடலூரில், குடியுரிமை திருத்த சட்ட நகலை கிழித்து மறியல் - 16 பேர் கைது

கடலூரில் குடியுரிமை திருத்த சட்டநகலை கிழித்து மறியலில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-23 22:15 GMT
கடலூர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர், மாணவர்கள் மறியல், ஆர்ப்பாட்டம், பேரணி என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்தவகையில், தமிழக மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தும் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது கடலூர் நகராட்சி பூங்கா எதிரே இந்திய மக்கள் ஜனநாயக இளைஞர் கழக மாநில அமைப்பாளர் மாயக்கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நகலை எரிக்க முயன்றனர். இதை அறிந்து தலைமை தபால் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினர் சட்ட நகலை கிழித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாயக்கண்ணன் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்து கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இந்த போராட்டத்தால் கடலூர் மஞ்சக்குப்பத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்