மனைவி தற்கொலை வழக்கில் மாற்றுத்திறனாளிக்கு 4 ஆண்டு ஜெயில் - செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மாற்றுத்திறனாளிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மும்பை,
மும்பை மலாடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சர்மிளா. இவர்களுக்கு 6 வயது மகள் உள்ளாள். ராஜேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.
இதனால் மனஉளைச்சல் அடைந்த சர்மிளா வீட்டில் தனியாக இருந்த போது மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில், படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சர்மிளா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி நடந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ராஜேசின் கொடுமை தாங்க முடியாமல்தான் சர்மிளா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ராஜேசை கைது செய்து, மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில், அவர் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு, 6 வயது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய ராஜேசுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.