தேர்தல் அலுவலர்கள், பணியாளர்கள் வாக்களிக்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கலாம் - கலெக்டர் தகவல்
தோ்தல் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் வாக்களிக்கக்கூடிய விண்ணப்பம், அவர்கள் பணிபுரியும் வாக்குச்சாவடி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 1,760 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரிய சுமார் 8 ஆயிரம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கடந்த 14-ந்தேதி முதல்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 2-வது கட்டமாக நேற்றுமுன்தினம் மாவட்டத்தில் 12 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. காளையார்கோவிலில் நடைபெற்ற பயிற்சியில் கலெக்டர் ஜெயகாந்தன் கலந்துகொண்டு பேசினார்.
அப்ேபாது அவர் கூறியதாவது:-
பொதுவாக ஊரக உள்ளாட்சி தோ்தலை பொறுத்தவரை அதிகளவில் மக்களின் வருகை இருக்கும். அதற்கேற்ப நீங்கள் தேர்தல் விதிகளை சரியாக கடைபிடித்து சிறந்த முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவு மையத்தின் முதன்மை அலுவலர்கள் தேர்தல் முதல்நாளன்று அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் சரியாக உள்ளதா என தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் உடன் பணியாற்றவுள்ள பணியாளா்களின் வருகை குறித்தும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். தோ்தல் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கான வாக்களிக்கக்கூடிய விண்ணப்பம் தாங்கள் பணி மேற்கொள்ளவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.