கள்ளக்குறிச்சி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது 31 பவுன் நகை மீட்பு

கள்ளக்குறிச்சி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 31 பவுன் நகை மீட்கப்பட்டது.

Update: 2019-12-22 23:00 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே சித்தலூர் கிராமத்தில் வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தியாகதுருகம் அருகே வடதொரசலூரை சேர்ந்த அசோக்குமார் (வயது 27). என்பது தெரிந்தது. மேலும் அவர் கடந்த 4-9-2019 அன்று கள்ளக்குறிச்சியில் இருந்து கொங்கராயப்பாளையத்துக்கு பஸ்சில் சென்ற கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே மரூர் கிராமத்தை சேர்ந்த மலர் என்ற பெண்ணிடம் இருந்து 3 பவுன் நகை திருடியதும் தெரிந்தது.

கைது

இது தவிர கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த சந்திரா என்பவரின் வீட்டில் இருந்து 4¾ பவுன் நகை, குருநாதபுரத்தை சேர்ந்த பச்சையம்மாள் என்பவரின் வீட்டில் இருந்து 16½ பவுன் நகை திருடியது உள்பட கள்ளக்குறிச்சி பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டிருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 31 பவுன் நகை மீட்கப்பட்டது. இது தவிர மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்