போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்: மேலும் ஒரு சாராய வியாபாரி கைது போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை

ஒரத்தநாடு அருகே போலீஸ் ஏட்டு மீது தாக்குதல் நடத்திய மேலும் ஒரு சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை நடத்தினார்.;

Update: 2019-12-22 22:30 GMT
ஒரத்தநாடு,

ஒரத்தநாடு வட்டம் திருவோணம் போலீஸ் சரகம் புதுவிடுதி கிராமத்தை சேர்ந்தவர்கள் அருள்பாண்டியன் (வயது28), இளங்கோ (43). இவர்கள் 2 பேரும் வெளிச்சந்தையில் வி‌‌ஷத்தன்மை கொண்ட சாராயம் விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்தனர். இதையடுத்து பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் ஏட்டு செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் கடந்த 19-ந்தேதி புதுவிடுதி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த அருள்பாண்டியனை பிடிக்க முயன்றனர். அப்போது அருள்பாண்டியனும், இளங்கோவும் சேர்ந்து செந்தில்குமாரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் வாட்ஸ்-அப் மற்றும் இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து போலீஸ் ஏட்டு செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 20-ந்தேதி சாராய வியாபாரி இளங்கோவனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சாராய வியாபாரி அருள்பாண்டியனை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் தலை மறைவாக இருந்த அருள்பாண்டியனை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் நேற்று இரவு திருவோணம் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்