இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிப்போம் எச்.ராஜா பேட்டி

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிப்போம் என்று எச்.ராஜா கூறினார்.

Update: 2019-12-22 23:15 GMT
நன்னிலம்,

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 1½ லட்சம் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் மோடி ஆட்சி வந்த பிறகு இலங்கையில் ஒரு தமிழர் மற்றும் ஒரு மீனவர் கூட கொல்லப்படவில்லை. இலங்கை வடக்கு மகாணத்தில் முதல்-அமைச்சரிடம் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து பேசுவோம். நான் ராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமிற்கு நேரடியாக சென்றுள்ளேன். அவர்கள் இங்கு எல்லா வசதிகளை பெற வேண்டும் என விரும்புகிறோம். தமிழக முதல்-அமைச்சர், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து பரிசீலிப்போம்.

10 ஆயிரம் வீடுகள்

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளோம். அங்கு இருக்கும் மக்கள் பாதுகாப்பாக உள்ளார்கள். இன்னும் அதிகாரத்தோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இலங்கை அண்டை நாடு. இது பற்றி பேசுவோம். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பா.ஜனதா கட்சி பாரம்பரியத்தை அழிப்பதாக கூறியுள்ளாரே என்ற கேட்டதற்கு, கமல்ஹாசன் உலக நாயகனாக இருந்தால் மட்டும் போதாது. அவருக்கு உலக அறிவும் வேண்டும். நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன பிரிவு 11 தெளிவாக கூறுகிறது. இதற்கு முன்பு குடியுரிமை சட்டம் 4 முறை திருத்தப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் ஆட்சியில் 3 முறை திருத்தியுள்ளார்கள். கமல்ஹாசனுக்கு அரசியல் சட்டம், நாடாளுமன்ற சட்டம் பற்றி ஒன்றுக்கூட தெரியவில்லை.

அகில இந்திய அளவில் குடியுரிமை சட்டம் பற்றி ஒரு மாதத்திற்கு மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற உள்ளது. ஒரு மாதம் வீடு-வீடாக சென்று குடியுரிமை சட்டம் பற்றி விளக்க உள்ளோம். இதை பற்றி ஸ்டாலினும் புரிந்து கொள்ளட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்