இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன் பேட்டி

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன் கூறினார்.

Update: 2019-12-22 22:15 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன் வந்தார். அவர் அங்குள்ள வீடுகளையும், அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளையும் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அகதிகள், “எங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். நாங்கள் 37 வருடங்களாக இங்கே தான் குடியிருந்து வருகிறோம். நாங்கள் தான் அகதியாக இருந்துவிட்டோம். எங்கள் பிள்ளைகளாவது அகதிகளாக இல்லாமல் இங்குள்ள குடிமக்களாக வாழ வேண்டும்“ என்றனர்.

இதைத்தொடர்ந்து பாலகிரு‌‌ஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.வை சேர்ந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலி யுறுத்துவோம் என்று கூறி உள்ளார். இது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது. நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா வரும்போது அதுபற்றி பேசாமல் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு தற்போது இரட்டை குடியுரிமை பெற்றுத்தர கோரிக்கை வைப்போம் என்பது கேலிக்கூத்தாக உள்ளது.

பாரதீய ஜனதா கட்சி ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே ரே‌‌ஷன் கார்டு, ஒரே கொள்கை என்ற அடிப்படையில் ஆட்சி செய்கிறது. இந்துத்துவாவின் கொள்கையை ஆர்.எஸ்.எஸ். குரலாக இருந்து பாரதீய ஜனதா நாட்டில் நடைமுறைப்படுத்துகிறது. இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை மறைக்கவே குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்து, இந்து, முஸ்லிம்களிடையே பிரிவினையை மோடி ஏற்படுத்துகிறார்.

பிரச்சினைக்கு வன்முறை தீர்வாகாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார். அவர் கூறுகின்ற வன்முறை எது? மக்களை காவல்துறை அடித்து துன்புறுத்தி அடக்குமுறையை ஏவிவிட்டு உள்ளது. அதை கூறுகிறாரா? இல்லை, உரிமைக்காக போராடுகின்ற மக்களை கூறுகிறாரா? வன்முறை செய்வது அரசா? மக்களா? ரஜினிகாந்த் யார் பக்கம் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இன்று (திங்கட்கிழமை) சென்னையில் மிகப்பெரிய பேரணி நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட செயலாளர் பாஸ்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்