கோவையில் என்ஜினீயர் எாித்து கொலை - 2 மாதங்களுக்கு பிறகு உடல் மீட்பு

கோவையில் என்ஜினீயர் எரித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். 2 மாதங்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-12-22 23:00 GMT
போத்தனூர், 

கோவை சுந்தராபுரம் அருகில் உள்ள குறிச்சி கல்லுக்குழி வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). இவருடைய மனைவி அழகு. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சக்திவேல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுக்கு முன் பணியில் இருந்து விலகி, கோவை வந்து விட்டார். பின்னர் கோவையில் பணியாற்றி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சக்திவேலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் சக்திவேல் கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்று விட்டதாக தெரிகிறது. சக்திவேல் உறவினர்கள் யாருடனும் தொடர்பு வைத்து கொள்வதில்லை. நெல்லையை சேர்ந்த அக்காவிடம் மட்டும் அவ்வப்போது செல்போனில் பேசி வந்து உள்ளார்.

கடந்த 6 மாதமாக சக்திவேல் அவருடைய அக்காவை செல்போனில் தொடர்பு கொள்ளவில்லை. எந்த தொடர்பும் இல்லாததால் சந்தேகமடைந்த அவருடைய அக்கா தனது மகன் தினேசை கோவைக்கு அனுப்பி வைத்தார். தினேஷ் கோவை வந்து சக்திவேலின் வீட்டிற்கு சென்றார். வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த தினேஷ் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது சக்திவேல் உடல் தீயில் எரிந்து கருகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கிடந்த சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சக்திவேல் இறந்து 2 மாதங்களுக்கு மேல் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், தெற்கு உதவி கமிஷனர் செட்ரிக் மனுவேல் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதற்கட்ட விசாரணையில் சக்திவேல் எரிந்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மோப்பநாய் அந்த பகுதியில் சுற்றி சுற்றி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

சக்திவேலுக்கும், அவர் வசித்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. பெண் விவகாரத்தில் இந்த கொலைநடந்ததா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கோவையில் என்ஜினீயர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்