பெற்றோர் சண்டை போட்டதால் வேதனை: கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

பெற்றோர் சண்டை போட்டதால் மன வேதனை அடைந்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற சென்ற அண்ணனும் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-12-22 22:45 GMT
போத்தனூர்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் காளியாபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 45), தோட்டத்தொழிலாளி. இவரது மனைவி வேலுமணி. இவர்களுக்கு அருண்குமார் (25) உள்பட 2 மகன்களும், சித்ரா (17) உள்பட 3 மகள்களும் இருந்தனர். அதில் 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.

முத்துச்சாமி கடந்த 20 ஆண்டுகளாக மதுக்கரை அருகே உள்ள வழுக்குப் பாறையில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

முத்துச்சாமி தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வேலுமணியிடம் சண்டைபோட்டதாக தெரிகிறது. இதை வீட்டில் இருந்த அருண்குமார் மற்றும் சித்ரா ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துச்சாமி தனது மனைவி வேலுமணியை சரமாரியாக தாக்கி உள்ளார்.

இதில் மன வேதனையடைந்த சித்ரா வீட்டைவிட்டு வௌியேறி தோட்டத்தில் இருந்த கிணற்றில் குதித்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது அண்ணன் அருண்குமார் தனது தங்கையை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். ஆனால் அவர்கள் 2 பேருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுக்கரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் பிணமாக கிடந்த சித்ரா, அருண்குமாா் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர் சண்டை போட்டதால் மனவேதனை அடைந்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும், அவரை காப்பாற்ற சென்ற அண்ணன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்