ஜெயிலில் துன்புறுத்தல்: முருகனின் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை - சிறைத்துறை டி.ஐ.ஜி. தகவல்
ஜெயிலில் ஊழல் நடக்கிறது என்றும், துன்புறுத்துகிறார்கள் என்றும் முருகன் கூறிய குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என சிறைத்துறை டி.ஐ.ஜி.ஜெயபாரதி தெரிவித்தார்.;
வேலூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் முருகன் அறையில் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவருக்கான சிறைச்சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து முருகன் தன்னை சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள். சிறைக்குள் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். ஊழல் செய்கிறார்கள் என முருகன் குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளிக்காமல் சிறைத்துறை அதிகாரிகள் மவுனம் காத்து வந்தனர். இந்த நிலையில் வேலூரில் முன்னாள் சிறைவாசிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி கலந்து கொண்டார்.
நிருபர்கள் அவரிடம் சிறைத்துறை மீது முருகன் குற்றம் சாட்டியது குறித்து கேள்விகளை எழுப்பினர்.
அப்போது அவர் கூறுகையில், முருகன் அறையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டது உண்மை. இதையடுத்து தான் அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார். அதன் காரணமாகவே முருகன் இந்த புகார்களை தெரிவித்துள்ளார். என் மீதும், சிறைத்துறை அதிகாரிகள் மீதும் அவர் கூறிய புகார்களில் உண்மையில்லை என்றார்.
27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியான முருகனின் அறையில் எவ்வாறு செல்போன் வந்திருக்கும். உயர்பாதுகாப்பு அறையில் உள்ள முருகனின் அறையில் செல்போன் இருப்பதற்கு வாய்ப்புள்ளதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், உங்களின் கேள்வி, நாங்களே அவரது அறையில் செல்போன் வைத்தது போன்று உள்ளது என்றார்.