புதுவை அரசின் நியமனம் ரத்து: மாநில தேர்தல் ஆணையரை கவர்னரே இறுதி செய்வார்

புதுவை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையரை கவர்னரே இறுதி செய்வார் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-12-21 23:00 GMT
புதுச்சேரி,

புதுவையில் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2011-ம் ஆண்டும் முடிவடைந்தது.

அதன்பின் உள்ளாட்சி தேர்தலை நடத்த புதுவை அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. மேலும் மாநில தேர்தல் ஆணையர் பதவியும் காலியாக இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வார்டு வரையறை செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டது.

இதன்பின் வார்டு மறு வரையறை செய்யப்பட்டு கடந்த ஆண்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. ஆனால் இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத்தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு அரசியல் கட்சிகளின் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது அனைவரும் வார்டு மறுவரையறையில் சில திருத்தங்களை கூறினார்கள். அவற்றை சரிசெய்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று புதுவை அரசு அறிவித்திருந்தது.

இந்தநிலையில் புதுவை மாநில தேர்தல் ஆணையர் பதவியை நிரப்பிட உள்ளாட்சி துறை அறிவிப்பினை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் இந்தியா முழுவதிலும் உள்ள தகுதியுள்ளவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. கடந்த ஜூலை மாதம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கவர்னர் கிரண்பெடியின் உத்தரவின்பேரிலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குற்றஞ்சாட்டினர்.

பாலகிருஷ்ணன் நியமனம்

மாநில தேர்தல் ஆணையரை மாநில அரசுதான் நியமிக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து உள்ளாட்சித்துறையின் அறிவிப்பினை சபாநாயகர் சிவக்கொழுந்து கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி ரத்து செய்வதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து மறுநாளே மாநில தேர்தல் ஆணையராக அமைச்சரவையின் முடிவின்படி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்ட சபையில் அறிவித்தார். அன்றைய தினமே ஆணையர் பதவியேற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

மத்திய அரசு உத்தரவு

இந்த நடவடிக்கைகள் குறித்து கவர்னர் கிரண்பெடி மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை அரசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் மாநில தேர்தல் ஆணையரை இந்திய அளவில் விளம்பரம் செய்து ஒளிவுமறைவின்றி தேர்வு செய்யவேண்டும்.

இதற்கான தேர்வு கமிட்டி தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட வேண்டும். இதில் இறுதி முடிவினை கவர்னரே எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளர் அஸ்வனிகுமாருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஆணையருக்கான (பாலகிருஷ்ணன்) நியமன உத்தரவு செல்லாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்