ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைப்பு
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சீட்டுகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில், இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 333 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருந்தது. ஆனால், ஒரு ஒன்றிய கவுன்சிலர், 9 ஊராட்சி தலைவர்கள், 466 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 476 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.
இதனால் மீதமுள்ள 2 ஆயிரத்து 857 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்கு மொத்தம் 9 ஆயிரத்து 271 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்கள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை ஊராட்சிகளில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதனால் அந்த 4 பதவிகளுக்கும் வாக்காளர்கள் தனித்தனியாக வாக்களிக்க வேண்டும்.
இதற்கு வசதியாக 4 விதமான வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சீட்டுகள் அனைத்தும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று அவற்றை, ஊராட்சி ஒன்றியம் வாரியாக தேவையின் அடிப்படையில் பிரித்து அனுப்பும் பணி நடந்தது.
அப்போது அதிகாரிகள் முன்னிலையில் வாக்குச்சீட்டு இரும்பு பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் அவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணிகளை தேர்தல் பார்வையாளர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள், வாக்குச்சாவடி வாரியாக பிரித்து வைக்கும் பணி நடந்தது. இதில் 3 விதமான வாக்குபெட்டிகள், விரலில் வைக்கப்படும் மை, பென்சில், வாக்குப்பதிவு விவரங்களை குறிப்பிடும் படிவங்கள் உள்பட 43 வகையான பொருட்கள் எடுத்து தனியாக வைக்கப்பட்டன. மேலும் அவை மண்டல வாரியாக வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.