மோட்டார் சைக்கிளில் உறவினருடன் சென்றபோது: பஸ்சுக்கும், வேனுக்கும் நடுவில் சிக்கி போலீஸ்காரரின் மனைவி சாவு

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கணவரை பார்க்க உறவினருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற போலீஸ்காரரின் மனைவி, பஸ்சுக்கும், மினிவேனுக்கும் நடுவில் சிக்கி பலியானார்.

Update: 2019-12-21 23:30 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த கோவில்பதாகையைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 40). இவர், சென்னை பேசின்பிரிட்ஜ் போலீஸ் நிலையத்தில் உளவுப்பிரிவு போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தேவி(36). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த போலீஸ்காரர் ஹரிதாஸ், போரூரில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனது கணவரை பார்ப்பதற்காக நேற்று காலை தேவி, உறவினர் சதீஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

ஆவடி-பூந்தமல்லி சாலையில் ஜே.பி.எஸ்டேட் அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பஸ்சை, முந்திசெல்ல முயன்றபோது அதன் டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினார். இதனால் அந்த பஸ்சை பின்தொடர்ந்து சென்ற இவர்களின் மோட்டார்சைக்கிள், பஸ்சின் பின்புறம் மோதியது.

அப்போது அதே வேகத்தில் இவர்களுக்கு பின்னால் வந்த மினி வேன், இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்சுக்கும், மினிவேனுக்கும் நடுவில் சிக்கி தலையில் பலத்த காயம் அடைந்த தேவி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். சதீஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான தேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்