புதுமாப்பிள்ளையிடம் நகை திருடியவருக்கு தர்ம அடி - கடலூரில் பரபரப்பு
கடலூர் பஸ்நிலையத்தில் புதுமாப்பிள்ளையிடம் செல்போன், நகை திருடியவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருங்கூர் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் மணிவண்ணன்(வயது 35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மணிவண்ணனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து அவர் தனது உறவினர், நண்பர்களுக்கு திருமண பத்திரிகை கொடுத்து வருகிறார்.அதன்படி கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள தனது நண்பர்களுக்கு திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக மணிவண்ணன் நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து பஸ்சில் கடலூருக்கு வந்தார். பின்னர் அவர் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு ஊருக்கு செல்வதற்காக இரவு கடலூர் பஸ்நிலையத்துக்கு வந்தார்.
ஆனால் ஊருக்கு செல்வதற்கு பஸ் எதுவும் வரவில்லை. நள்ளிரவில் வெகு நேரம் காத்திருந்தும் பஸ் வராததால் மணிவண்ணன் பஸ்நிலையத்தின் உள்ளே நடைபாதையில் படுத்து தூங்கினார். அப்போது அவரது அருகில் மர்ம நபர் ஒருவர் படுத்து உறங்குவது போல பாவனை காட்டினார். சில நிமிடங்களுக்கு பிறகு அந்த மர்ம நபர் மணிவண்ணன் கையில் அணிந்திருந்த 2 பவுன் கைசெயின், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை திருடி உள்ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது சுதாரித்து எழுந்த மணிவண்ணன் திருடன் திருடன் என கத்தினார். உடனே மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
இதைப்பார்த்து பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் அந்த நபரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் பெரிய கோட்டகுப்பம் பழையபட்டி பாதையை சேர்ந்த ஜெயமூர்த்தி(44) என்பதும், இரவு நேரம் கடலூர் பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் செல்போன், நகைகளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜெயமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் ஒரு கைசெயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலூர் பஸ்நிலையத்தில் புதுமாப்பிள்ளையிடம் நகை, செல்போன் திருடிய நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.