குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 9½ லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சடிப்பு

குமரி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கு 8 ஒன்றியங்களுக்கு 9½ லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இணைக்கும் தாள் மதுரையில் தயாராகிறது.

Update: 2019-12-21 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டமாக வருகிற 27-ந் தேதியும், 2-வது கட்டமாக வருகிற 30-ந் தேதியும் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை வேகமாக செய்து வருகிறார்கள்.

வாக்குப்பதிவு எந்திரம்

அதன் ஒரு கட்டமாக வாக்குச்சீட்டு அச்சிடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மொத்தம் உள்ள 9 ஒன்றியங்களில் மேல்புறம் ஒன்றியத்தில் உள்ள 114 வாக்குச்சாவடிகளில் மட்டும் முதன்முறையாக உள்ளாட்சித்தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக நடைபெற இருக்கிறது.

இந்த ஒன்றியத்தில் மட்டும் 61 ஆயிரத்து 21 வாக்காளர்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக தங்களது வாக்குகளை செலுத்த உள்ளனர். மீதமுள்ள 4 லட்சத்து 57 ஆயிரத்து 89 வாக்காளர்கள் வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்களிக்க இருக்கிறார்கள்.

4 வாக்குகள்

ஒவ்ெ்வாரு வாக்காளரும் ஊராட்சி தலைவர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் என 4 வாக்குகள் செலுத்த வேண்டும். அதில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை மாநில தேர்தல் ஆணையம் அச்சிட்டு வழங்கியுள்ளது. அந்த வாக்குச்சீட்டுகள் அனைத்தும் ராஜாக்கமங்கலம் ஒன்றிய அலுவலகத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்தது. அவை நேற்று 9 ஒன்றியங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத்தவிர ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சிகளின் சின்னங்களும் இடம் பெறுவதால் இதற்கான வாக்குச்சீட்டுகள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் சார்பில் அச்சிடப்படுகின்றன.

குமரி- மதுரையில் அச்சடிப்பு

இதற்காக குமரி மாவட்டத்தில் உள்ள 7 அரசு மற்றும் தனியார் அச்சகங்களுடன் தேர்தல் அதிகாரிகள் ஒப்பந்தம் செய்து கடந்த 20-ந் தேதி முதல் இரவு, பகலாக வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணி நடந்து வந்தது. அந்த அச்சகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. ராஜாக்கமங்கலம் ஒன்றியத்துக்கான வாக்குச்சீட்டுகளும், மேல்புறம் ஒன்றியத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இணைக்கப்படக்கூடிய தாளும் மதுரையில் உள்ள ஒரு அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

மொத்தம் மேல்புறம் தவிர 8 ஒன்றியங்களுக்கு 9½ லட்சம் வாக்குச் சீட்டுகளும், மேல்புறம் ஒன்றியத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இணைக்கும் தாள் 5 ஆயிரமும் அச்சிடப்பட்டுள்ளன.

இன்று சென்றடையும்

முதல் கட்டமாக நேற்று பிற்பகலில் தோவாளை ஒன்றியத்துக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிட்டு அந்த ஒன்றியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மதுரையில் இருந்து ராஜாக்கமங்கலத்துக்குரிய வாக்குச் சீட்டுகளும், மேல்புறம் ஒன்றியத்துக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இணைக்கும் தாளும் நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டன. மற்ற ஒன்றியங்களுக்கான வாக்குச்சீட்டுகளும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வந்து சேரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் இந்த வாக்குச்சீட்டுகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இணைக்கும் தாள்கள் ஆகியவை இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளுக்கு அந்தந்த ஒன்றியங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளன.

மேலும் செய்திகள்