கீரனூரில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி

கீரனூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-12-21 23:00 GMT
கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள சின்ன மூலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 40). இவர் நேற்று தனது சின்னம்மாவான அதே பகுதியை சேர்ந்த ஜெயமணி(50) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கீரனூரில் உள்ள புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திருமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஜெயமணி படுகாயம் அடைந்தார்.

சாவு

இதைத்தொடர்ந்து கார் சாலையோரத்தில் இறங்கியது. இதனையடுத்து காரில் வந்தவர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு, தப்பி சென்று விட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த ஜெயமணியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய காரில் வந்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்