நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி ஸ்டிக்கர் கடை உரிமையாளர் கைது

நாமக்கல்லில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்றதாக ஸ்டிக்கர் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-12-21 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் சிட்கோ காலனியை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 35). ஸ்டிக்கர் கடை நடத்தி வரும் இவர், மாவு அரவை மில்லும் வைத்து உள்ளார். இவருடைய மனைவி சுஜிதா (25). இவர்களுக்கு 3 மற்றும் 5 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

ராஜவேல், தனது மனைவி சுஜிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ராஜவேல், தனது மனைவியை அடித்ததாக தெரிகிறது.

கொல்ல முயற்சி

இதையடுத்து கணவரிடம் கோபித்து கொண்டு சுஜிதா நாமக்கல் அருகே உள்ள குப்பம்பாளையத்தில் வசித்து வரும் பாட்டி சம்பூர்ணம் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று ராஜவேல், குப்பம்பாளையம் சென்று தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்து உள்ளார். அதற்கு சுஜிதா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜவேல், தனது மனைவி சுஜிதாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்று உள்ளார். அவர் சத்தம்போடவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சுஜிதாவை மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை கொலை செய்ய முயன்ற ராஜவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்