திண்டுக்கல் அருகே, அறுவடைக்கு தயாரான கரும்புகள்
திண்டுக்கல் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.
குள்ளனம்பட்டி,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் கரும்புகள் தான் முதலில் நினைவுக்கு வரும். அதிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கரும்பையே விரும்புவார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள பதனிகடை பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த ஆண்டு பருவமழை சராசரியாக பெய்ததால் கருப்புகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. தற்போது அவை அறுவடைக்கு தயாராக உள்ளன.
இந்த பகுதிகளில் விளையும் கரும்புகளை பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வயல்களுக்கு வந்து கொள்முதல் செய்து லாரியில் ஏற்றி செல்வது வழக்கம். தற்போது கரும்புகள் அறுவடைக்கு தயாராக உள்ளதால் வியாபாரிகள் அந்த பகுதியில் முகாமிட்டு, கரும்புகளை வாங்க விவசாயிகளிடம் பேரம் பேசி வருகின்றனர்.
இதுகுறித்து பதனிகடையை சேர்ந்த கரும்பு விவசாயி சுப்பிரமணி கூறுகையில், பொங்கல் பண்டிகைக்காக ஆண்டுதோறும் கரும்பு சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டுகளில் மழையின்றி போதிய தண்ணீர் இல்லாமல் கரும்புகள் விளைச்சல் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை சராசரியாக பெய்ததால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளது என்றார்.