குடியுரிமை சட்டத்தால் யாரையும் வெளியேற்ற மாட்டோம்; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேட்டி
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதால் யாரையும் நாட்டை விட்டு வெளியேற்ற மாட்டோம், இது தொடர்பாக பயப்பட வேண்டாம் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை,
மராட்டியத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று நடந்த போராட்டத்தின் போது, நாந்தெட், பீட், பர்பானி உள்ளிட்ட மாவட்டங்களில் வன்முறை உண்டானது. இதில் பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. போலீசார், பொதுமக்கள் காயம் அடைந்தனர்.
இந்தநிலையில் நாக்பூரில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எந்தவொரு சமூகத்தை சேர்ந்த அல்லது மதத்தை சேர்ந்த மக்களின் உரிமைகள் மீறப்படுவதற்கு மராட்டிய அரசு ஒரு போதும் அனுமதிக்காது. போராட விரும்புபவர்கள் அமைதியான முறையில் போராட வேண்டும். என்னை கூட சந்தித்து பேசலாம். எந்தவொரு சம்பவமும் மாநிலத்திற்கு ஒரு களங்கமாக இருக்கக்கூடாது. குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு யாரையும் நாட்டை விட்டு வெளியேற்ற மாட்டோம். இது தொடர்பாக யாரும் பயப்பட தேவையில்லை.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக அதிகளவில் அமைதியின்மை மற்றும் தவறான புரிதல் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் சட்டப்பூர்வமானதா? என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு இன்னும் முடிவு செய்யவில்லை. எனவே மக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக மக்களவையில் சிவசேனா ஆதரித்து வாக்களித்தது. பின்னர் மாநிலங்களவையில் அந்த கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.