குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: குளச்சலில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று குளச்சலில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குளச்சல்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுக்கிறது. பல இடங்களில் வன்முறை சம்பவம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று குளச்சல் முஸ்லிம் முகல்லம் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் நடந்தது. இதற்கு முகல்ல தலைவர் பஷீர் கோயா தலைமை தாங்கினார். துணை தலைவர் அமீதுல் அக்பர், செயலாளர் ஜலாலுதீன், இணை செயலாளர் அப்துல் ரகீம், பொருளாளர் அமீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டம் குறித்து அப்துல் சலாம் ஜலாலி, அபிபு ரகுமான் ஆகியோர் பேசினர். குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார்.
இந்த போராட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் முனாப், நகர தலைவர் சந்திரசேகர், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ஜலாலுதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் நசீம், பொருளாளர் சுபேர், நகர தலைவர் பலீல், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து, மாவட்ட ஜமாத் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர் யூசுப்கான் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
மங்களூரில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டிப்பது, குடியுரிமை சட்ட திருத்தம் நிறைவேற காரணமாக இருந்த அ.தி.மு.க. அரசை வன்மையாக கண்டிப்பது, அந்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை தொடர் போராட்டம் நடத்துவது என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.