காற்றுமாசை தடுக்க வலியுறுத்தி சைக்கிளில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளி - கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை செல்கிறார்
காற்று மாசை தடுக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி ஒருவர் கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
திருப்பூர்,
ராமநாதபுரம் திருநகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 36). சமூக சேவகர். இடது கால் இழந்த மாற்றுத்திறனாளியான இவர் காற்று மாசுபடுவதை தடுக்க வலியுறுத்தியும், இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 13-ந் தேதி கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பயணத்தை மணிகண்டன் தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அதிகாரிகளிடம் காற்று மாசுபடுவதை தடுத்தல், மரக்கன்று நடுதல், நதிநீர் இணைப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, இயற்கை விவசாயம், உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட 10 விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்தார். மாநகரில் உள்ள மக்களிடமும் துண்டு பிரசுரங்கள் கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
இந்த பயணம் குறித்து மணிகண்டன் கூறும்போது, “நான்எம்.காம். பி.எட்., பி.லிட் படித்துள்ளேன். அரசின் தகுதி தேர்வுகளை எழுதி வேலைவாய்ப்புக்காக காத்திருக்கிறேன். 15 வயதில் கிரிக்கெட் விளையாட்டின்போது ஏற்பட்ட காயத்தில் எனது இடது கால் முழுவதுமாக அகற்றப்பட்டது. எனக்கு சிறிய வயது முதல் சமூக அக்கறை உண்டு.
கடந்த 2013-ம் ஆண்டு மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டேன். இப்போது சென்னையை நோக்கி சென்று கொண்டிருக்கி றேன். 1,200 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்கிறேன். எனக்கு துணையாக எனது நண்பர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
வருகிற 1-ந் தேதி சென்னை மெரினா கடற் கரையில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன்” என்றார்.
பின்னர் திருப்பூரில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றார்.