நாள் முழுவதும் சாரல் மழை: கொட்டாரம் பகுதியில் 28 மி.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் நேற்று நாள் முழுவதும் சாரல் மழை பெய்தது. கொட்டாரம் பகுதியில் 28 மி.மீ. மழை பதிவானது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் மாவட்டத்தில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.
நாகர்கோவிலில் நேற்று காலை 7.15 மணியில் இருந்து சாரல் மழை தொடங்கியது. இந்த மழை நாள் முழுவதும் பெய்து கொண்டே இருந்தது.
இதனால் பள்ளி- கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ- மாணவிகளும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் நேற்று காலை பஸ் நிலையங்கள் மற்றும் சாலைகளில் குடைபிடித்தபடி நடந்து சென்றதை காண முடிந்தது.
இந்த மழை நேற்று இரவு வரை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இதேபோல மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 6 மணி வரையில் குமரி மாவட்டத்தின் எந்தப்பகுதியிலும் மழை பதிவாகவில்லை. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை- 8.6, மாம்பழத்துறையாறு- 15, நாகர்ே்காவில்- 26, பூதப்பாண்டி- 14, கன்னிமார்- 13.2, ஆரல்வாய்மொழி- 10, மயிலாடி- 25.2, கொட்டாரம்- 28, இரணியல்- 22, ஆனைக்கிடங்கு- 17.2, குளச்சல்- 9, குருந்தங்கோடு- 23, அடையாமடை- 9, கோழிப்போர்விளை- 15, முள்ளங்கினாவிளை- 18 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக கொட்டாரம் பகுதியில் 28 மி.மீ. மழை பெய்தது.
மழையினால் நேற்று மாலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 660 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 832 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு 300 கன அடி தண்ணீர் வருகிறது. அதே அளவு தண்ணீர் இந்த அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது.
நாள் முழுவதும் பெய்த இந்த மழையின் காரணமாக ரப்பர் பால்வெட்டும் தொழில், செங்கல்சூளைத் தொழில், கட்டுமானத் தொழில், உப்பளத் தொழில் போன்ற தொழில்கள் பாதிக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.