தென்காசி அருகே, கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து கொத்தனார் பலி
தென்காசி அருகே கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.;
தென்காசி,
தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவன் மகன் நயினார் (வயது 38). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆயிரப்பேரியில் இருந்து குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ஆயிரப்பேரி பகுதியில் உள்ள மூங்கில் ஓடை என்ற கால்வாய்க்குள் பாய்ந்தது.
இதனால் மோட்டார் சைக்கிளுடன் சேர்ந்து விழுந்த நயினார், தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
நயினார் உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் பலியான நயினாருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.