குற்றாலம் அருவிகளில் குளிக்க அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர்

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2019-12-20 22:00 GMT
தென்காசி, 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலத்தில் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். இந்த ஆண்டு சீசன் ஒரு மாதம் மட்டுமே நன்றாக இருந்தது. அதன் பிறகு அருவிகளில் தண்ணீர் இல்லாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனால், சீசன் முடிந்த பிறகு குற்றாலம் பகுதிகளில் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பருவமழை பெய்து வருவதால் தற்போது வரை குற்றாலம் அருவிகளில் வற்றாமல் நீர் வரத்து இருந்து கொண்டே இருக்கிறது.

வழக்கமாக சபரிமலைக்கு தென்காசி வழியாக செல்லும் பக்தர்கள் குற்றாலம் வந்து குளித்து செல்வார்கள். அதுபோல இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் குற்றாலத்தில் குவிந்து அருவிகளில் குளித்துச்செல்கின்றனர்.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குற்றாலத்தில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. அய்யப்ப பக்தர்கள் கூட்டம் இரவு பகலாக அதிகரித்து வருகிறது. நள்ளிரவிலும் பக்தர்கள் ஏராளமானோர் ஆனந்தமாக குளித்து செல்கிறார்கள்.

மேலும் செய்திகள்