கும்பகோணம் அருகே, நடத்தையில் சந்தேகம்: வாழைப்பழத்தில் வி‌‌ஷம் வைத்து காதலியை கொன்ற வாலிபர் கைது

கும்பகோணம் அருகே காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருக்கு வாழைப்பழத்தில் வி‌‌ஷம் வைத்து கொடுத்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-12-20 22:45 GMT
கும்பகோணம், 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நந்திவனம் மெயின் சாலையில் வசித்து வந்தவர் ரவி மகள் தமிழ்(வயது 20). இவர், அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். கும்பகோணம் கோபிநாதபெருமாள் கோவில் பகுதியில் வசிப்பவர் முனியன் மகன் அய்யப்பன்(26) கூலித்தொழிலாளி.

இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று தமிழ் வேறொருவருடன் போனில் பேசுவதாக அய்யப்பன் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் காதலியின் நடத்தையில் அய்யப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் சென்றனர். சே‌‌ஷம்பாடி என்ற இடத்தில் சென்றபோது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் தற்கொலை செய்து கொள்வதாக பேசிக்கொண்டனர். அதன்படி அய்யப்பன், தமிழுக்கு வாழைப்பழத்தில் எலிமருந்து(வி‌‌ஷம்) வைத்து கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளார். அதன்பிறகு அய்யப்பன், தானும் வாழைப்பழம் சாப்பிடுவதாக கூறியுள்ளார்.

ஆனால் அய்யப்பன் வி‌‌ஷம் வைத்த வாழைப்பழத்தை சாப்பிடவில்லை. சிறிது நேரத்தில் தமிழ் மயக்கமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த தமிழின் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து காதலிக்கு வி‌‌ஷம் கொடுத்து கொன்றதாக அய்யப்பனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்