ஓட்டல் அதிபரிடம் கவரிங் நகையை கொடுத்து ரூ.5 லட்சம் பறிக்க முயற்சி - 2 பேர் கைது

புதையலில் கிடைத்ததாக கூறி கவரிங் நகையை கொடுத்து ஓட்டல் அதிபரிடம் ரூ.5 லட்சம் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-12-20 22:15 GMT
பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டை தியாகப்பசெட்டி தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 42). அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் சாப்பிட வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், “நான் பொக்லைன் எந்திரம் டிரைவராக உள்ளேன். ஒரு இடத்தில் பள்ளம் தோண்டும்போது எனக்கு தங்க புதையல் கிடைத்தது. அதில் தங்க நகைகள், நாணயங்கள் உள்ளன. அதை எடுத்து வருகிறேன்” என்று கூறிச்சென்றார்.

அதன்பிறகு அந்த நபர், தனது நண்பர் ஒருவருடன் மீண்டும் சசிகுமார் கடைக்கு வந்து சாப்பிட்டார். பின்னர் புதையலில் கிடைத்ததாக கூறி நகைகள் மற்றும் நாணயங்கள் சிலவற்றை சசிகுமாரிடம் கொடுத்து அதற்கு பதிலாக ரூ.5 லட்சம் தரும்படி கேட்டார்.

அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சசிகுமார் மற்றும் அங்கிருந்த அவருடைய நண்பர் தென்னரசு ஆகியோர் ஆர்.கே.நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த பீம் பிரகாஷ் (26), குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் (38) என்பதும், இவர்கள் புதையலில் கிடைத்ததாக கூறி கவரிங் நகைகளை கொடுத்து சசிகுமாரிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரிந்தது.

இதையடுத்து 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள், இதுபோல் சென்னை புறநகர் பகுதிகளில் யாரிடமாவது புதையலில் கிடைத்ததாக கூறி கவரிங் நகையை கொடுத்து பணம் பறித்து உள்ளனரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்