பாலியல் சீண்டல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, செவிலிய மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி

பாலியல் சீண்டல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலிய மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி தொடங்கப்பட்டது.

Update: 2019-12-20 22:45 GMT
திருச்சி,

‘மாதராக பிறக்க மாதவம் செய்திடவேண்டும் அம்மா...’ என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடிய நமது பாரத நாட்டில் இன்று பெண்களுக்கு எதிராக கொடுமைகள், வன்முறைகள், பாலியல் சீண்டல்கள் பரவலாக அரங்கேறி வருகின்றன.

போக்சோ, குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் என எத்தனையோ சட்டங்கள் இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண் குழந்தை வீடுதிரும்பும் வரை பெற்றோர்கள் அச்ச உணர்விலேயே வாழ வேண்டிய நிலை உள்ளது.

இந்த பிரச்சினையில் இருந்து பெண்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் விடுதியில் தங்கி நர்சிங் படித்து வரும் மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புக்கலை கற்று கொடுக்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலிய மாணவிகள் சுமார் 300 பேர் உள்ளனர். இவர்களுக்கு கராத்தே பயிற்சியாளர் இளஞ்செழியன் தலைமையிலான பெண் பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவினர் பயிற்சி அளித்து வருகிறார்கள்.

இதுபற்றி அரசு மருத்துவமனை நர்சிங் பயிற்சி கல்லூரியின் முதல்வர் இளங்கோ கூறியதாவது:-

அரசு மருத்துவமனை நர்சிங் பயிற்சி கல்லூரியில் படிக்கும் 300 மாணவிகளையும் தலா 100 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து இந்த பயிற்சியை அளித்து வருகிறோம். இந்த தற்காப்புக்கலையை கற்றுக்கொண்ட ஒரு மாணவி சாலையில் நடந்து செல்லும்போதோ அல்லது தனிமையில் இருக்கும் போதோ ஆண்களால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானால் அவர்களை நொடிப்பொழுதில் தாக்கி தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்