திண்டுக்கல் அருகே, 3 லாரி டிரைவர்களுக்கு கத்திக்குத்து; பணம், செல்போன்கள் கொள்ளை
திண்டுக்கல் அருகே 3 லாரி டிரைவர்களை கத்தியால் குத்திவிட்டு பணம், செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாடிக்கொம்பு,
தர்மபுரி மாவட்டம் ஏரியூரை சேர்ந்தவர் அருள் (வயது 27), ஜக்கசமுத்திரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (28). லாரி டிரைவர்களான இவர்கள் 2 பேரும் தனித்தனி லாரிகளில் தர்மபுரியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டத்திற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை புறப்பட்டனர். இவர்களை போன்றே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (58) என்பவரும் சேலத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு கன்டெய்னர் லாரியில் வாகன உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
3 லாரிகளும் திண்டுக்கல் மாவட்டம் செங்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் நள்ளிரவு வந்தன. அப்போது அவர்கள் அங்கு லாரி டிரைவர்கள் தங்கி ஓய்வெடுத்து செல்லும் பகுதியில் சாலையோரம் லாரிகளை நிறுத்திவிட்டு, லாரிகளில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அதிகாலை 2 மணி அளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 மர்ம நபர்கள் செங்குளம் பகுதிக்கு வந்தனர். அப்போது அந்த நபர்கள் திடீரென்று தனித்தனி லாரிகளில் தூங்கிக்கொண்டிருந்த டிரைவர்களான தமிழ்செல்வன், ரமேஷ் மற்றும் அருள் ஆகியோரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன்களை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டனர். இதில் தமிழ்செல்வன் மற்றும் ரமேசிடம் இருந்த ரூ.11 ஆயிரத்தையும், 2 செல்போன்களையும் மர்மநபர்கள் பறித்தனர். அருளிடம் பணம், செல்போன் இல்லை. இதனால் அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தமிழ்செல்வன், ரமேஷ் ஆகியோருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. அருள் என்பவருக்கு கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து காயமடைந்த லாரி டிரைவர்களின் அபயகுரல் கேட்டு வந்த பிற லாரி டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள், 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லாரி டிரைவர்களை தாக்கி வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர்களை தாக்கிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இதேபோன்று இரவில் சாலையோரம் லாரிகளை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் டிரைவர்களை தாக்கி நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கும் சம்பவம் திண்டுக்கல் பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 4 டிரைவர்களை தாக்கி இதேபோல் மர்ம ஆசாமிகள் பணம் மற்றும் நகையை பறித்துள்ளனர். அந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. எனவே இனியாவது இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.