மயிலாடுதுறையில், சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் செல்போன்கள் பறித்த 6 பேர் கைது

மயிலாடுதுறையில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் செல்போன்கள் பறித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-20 23:00 GMT
மயிலாடுதுறை, 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து செல்போன்களை வழிப்பறி செய்யும் சம்பவம் நடந்து வந்தது. இதுதொடர்பான புகார்களின் பேரில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் நரசிம்மபாரதி, அசோக், செந்தில், பாலா, தெய்வசிகாமணி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் மயிலாடுதுறை நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பஸ் நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றி கொண்டிருந்த 3 வாலிபர்களை மாறு வேடத்தில் இருந்த போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை கொடுத்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள், மயிலாடுதுறை அருகே மணக்குடி கீழிருப்பு வடக்கு தெருவை சேர்ந்த வீரமணி மகன் ராம்குமார் (வயது 22), அகர மணக்குடி தெருவை சேர்ந்த துரை மகன் வசந்த் (19), அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கார்த்தி (21), மணக்குடி கீழிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த முருகப்பா மகன் விவேக் (22), முருகன் மகன் கார்த்தி (19), அகர மணக்குடியை சேர்ந்த செல்வகுமார் மகன் கீர்த்திவாசன் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள், சாலையில் செல்போன் பேசி கொண்டு செல்வோரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்று அவர்களின் செல்போனை கண் இமைக்கும் நேரத்தில் வழிப்பறி செய்து தப்பி செல்வதும், ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் பெண்களிடம் இருந்து பைகளை பறித்து கொண்டு தப்பி செல்வதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக சம்பவ இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்த ராம்குமார், வசந்த், கார்த்தி, விவேக், மற்றொரு கார்த்தி, கீர்த்திவாசன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். வழக்கு தொடர்பாக 3 செல்போன்கள், ரூ.4 ஆயிரம், சக்கரம் பொறித்த வெள்ளித்தட்டு, 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்