நிலக்கோட்டை அருகே, காதல் திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால் விஷம் குடித்து ராணுவ வீரர் தற்கொலை - உடலை வாங்க மறுப்பு; மருத்துவமனை மீது கல்வீச்சு

நிலக்கோட்டை அருகே காதல் திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால் விரக்தியடைந்த ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து, அரசு மருத்துவமனை மீது இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-20 23:00 GMT
நிலக்கோட்டை, 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சங்கராபுரத்தை சேர்ந்தவர் யாகப்பன். இவருடைய மகன் ஆரோக்கிய பிரகாஷ் (வயது 24). இவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவரும், கொடைக்கானலை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரோக்கிய பிரகாஷ் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவர் தனது பெற்றோரிடம் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்ட அவரது பெற்றோர், காதல் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆரோக்கிய பிரகாஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது ஆரோக்கிய பிரகாஷ் விஷம் குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

அப்போது அங்கிருந்த உறவினர்கள் ஆத்திரம் அடைந்து, உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் தகராறு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர் ஆரோக்கிய பிரகாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஆரோக்கிய பிரகாசின் உடல், நிலக்கோட்டை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி சில இளைஞர்கள் மது போதையில் அரசு மருத்துவமனை மீது கல்வீசி தாக்கினர். பின்னர் அந்த இளைஞர்களை, உறவினர்கள் சமரசம் செய்து அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் நிலக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்