குன்னம் அருகே, ஏரி வடிகால் வாய்க்காலில் ஆட்டோ டிரைவர் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை

குன்னம் அருகே ஏரி வடிகால் வாய்க்காலில் ஆட்டோ டிரைவர் பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் அடித்து கொலை செய்து வீசினார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2019-12-21 04:30 IST
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வயலூர் புதுக்காலனியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சுபா‌‌ஷ் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி கண்ணகி என்கிற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு சுபா‌‌ஷ் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சுபாசை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை கீழப்பெரம்பலூர் ஏரி அருகே உள்ள வடிகால் வாய்க்காலில் ஓடுகின்ற தண்ணீரில் சுபா‌‌ஷ் பிணமாக மிதந்தவாறு கிடந்தார். மேலும் அவரது மோட்டார் சைக்கிளும் தண்ணீரில் கிடந்தது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சுபா‌‌ஷ் குடும்பத்தினர் விரைந்து சென்றனர். அப்போது அவர்கள் சுபாசின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதற்கிடையே குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுபாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் பெண்ணின் செருப்பு கிடந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபா‌‌ஷ் மோட்டார் சைக்கிள் சென்ற போது மரத்தின் மீது மோதியதில் இறந்ததாரா? அல்லது யாரேனும் சுபாசை அடித்து கொலை செய்து வடிகால் வாய்க்காலில் வீசி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்