போடி அருகே, பால் வியாபாரியின் வீட்டில் 35 பவுன் நகை திருடிய வழக்கில் ஆட்டோடிரைவர் உள்பட 3 பேர் கைது

போடி அருகே பால் வியாபாரியின் வீட்டில் 35 பவுன் நகை திருடிய வழக்கில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-12-20 22:15 GMT
போடி,

போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் விநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் குருநாதன் (வயது 48). பால் வியாபாரி. இவர் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் மாடியில் கண்ணாடியால் ஆன கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த குருநாதன் மாடியில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைக்கப்பட்டு இருந்த 35 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியந்தது. இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் குருநாதனின் உறவினரும், ஆட்டோ டிரைவருமான அதே பகுதியை சேர்ந்த முத்துபிரகாஷ் (31) என்பவர் அதிகமாக பணம் வைத்துக் கொண்டு ஊதாரித்தனமாக செலவு செய்து வந்தது தெரிந்தது. இதுகுறித்து குருநாதன் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் முத்துபிரகாசை பிடித்து துருவித்துருவி விசாரித்தனர். அப்போது முத்துபிரகாஷ், அதே ஊரை சேர்ந்த கண்ணப்பன் (44), மேல்மங்கலத்தை சேர்ந்த சக்திவேல் (42) ஆகியோருடன் சேர்ந்து நகைகளை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 35 பவுன் நகைகளையும் போலீசார் மீட்டனர். பின்னர் அவர்கள் போடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உத்தமபாளையம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரை சிக்க வைக்க முயன்ற குற்றவாளி 

இந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணப்பனுக்கும், போடி தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளரான செல்வம் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் போலீஸ் விசாரணையின்போது கண்ணப்பன், செல்வத்தை சிக்க வைப்பதற்காக தான் திருடிய நகை மற்றும் பணத்தை செல்வத்திடம் கொடுத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார். இதனை நம்பிய போலீசார் இரவு நேரத்தில் செல்வத்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் கண்ணப்பன் கூறியது பொய் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செல்வத்தை வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்