வகுப்பறையில் பேராசிரியை தற்கொலை: கல்லூரி பேராசிரியர் கைது
கல்லூரி வகுப்பறையில் பேராசிரியை தற்கொலை செய்த வழக்கில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, கரலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அரிசாந்தி(வயது 32). இவர், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் தெலுங்கு உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். அதன்பிறகு அரசு பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்ததால் சில வருடங்களுக்கு முன்பு பேராசிரியை வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் தான் வேலை பார்த்த கல்லூரிக்கு சென்ற அரிசாந்தி, அங்குள்ள வகுப்பறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். முன்னதாக தனது கையிலும் பிளேடால் கீறிக்கொண்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக அதே கல்லூரியில் பணிபுரிந்து வரும் தெலுங்கு பேராசிரியர் நடராஜன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுபற்றி போலீசார் கூறியதாவது:-
நடராஜனும், அரிசாந்தியும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதலே பள்ளியில் ஒன்றாக படித்தனர். அரிசாந்தி இந்த கல்லூரியில் தெலுங்கு உதவி பேராசிரியராக பணிக்குச் சேர்ந்தபோது நடராஜனுடன் காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்தனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடராஜனுக்கு அவரது உறவினர் மகளுடன் திருமணம் நடந்தது. தற்போது அவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஆனால் அதன்பிறகும் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ளும்படி நடராஜனிடம் அரிசாந்தி வற்புறுத்தி வந்தார். இதற்கிடையில் அரசு பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்தவுடன் அரிசாந்தி அங்கு சென்றுவிட்டார். இருப்பினும் தனது காதலை மறக்க முடியாமல் அடிக்கடி கல்லூரிக்கு வந்து நடராஜனை பார்த்துவிட்டு சென்றார்.
சம்பவத்தன்று நடராஜனை சந்தித்து, தன்னை 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அதற்கு அவர் மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து சென்ற நடராஜன், செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
இதனால் மனம் உடைந்த அரிசாந்தி, தான் கல்லூரி வகுப்பறையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நடராஜனின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு, தனது கை மணிக்கட்டை அறுத்து கொண்டும், பின்னர் துப்பட்டாவால் வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டும் தற்கொலை செய்து கொண்டார்.
மறுநாள் காலையில் எழுந்து செல்போனை பார்த்த நடராஜன், அரிசாந்தியின் குறுந்தகவலை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பதறி அடித்துக்கொண்டு கல்லூரிக்கு சென்று பார்த்தபோது, அங்கு வகுப்பறையில் அரிசாந்தி தூக்கில் பிணமாக தொங்குவது தெரிந்தது.
இதையடுத்து கைதான நடராஜன் மீது அரிசாந்தியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.