மங்களூருவில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் தடையை மீறி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.
வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் பலியானார்கள். இதைதொடர்ந்து மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மங்களூரு,
மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றி உள்ளது. இந்த சட்ட திருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் படி நாடு முழுவதும் முஸ்லிம்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் நாடுமுழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோல் கர்நாடக கடலோர மாவட்டமான தட்சிணகன்னடா மாவட்டத்திலும் நேற்று முன்தினம் முதல் நாளை(சனிக்கிழமை) வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிந்து பி. ரூபேஷ் நிருபர்களிடம் கூறுகையில், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊர்வலம், கூட்டம், போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. எனவே பொதுமக்கள் அனைவரும் போலீசாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் மங்களூரு டவுன் பந்தரில் இருந்து முஸ்லிம் அமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் நேற்று மதியம் 2.30 மணி அளவில் திடீரென்று பாண்டேஸ்வர் பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகம் நோக்கி தடையை மீறி ஊர்வலமாக சென்றனர். அவர்களை கலெக்டர் அலுவலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் நடுரோட்டில் அமர்ந்து போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதைதொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக அரசு பஸ் மீது கல்வீசப்பட்டது. மேலும் போலீசார் மீதும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதனால் போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இருப்பினும் போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகம் முன்புள்ள சர்க்கிள் பகுதியில் நின்று சரமாரியாக போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அந்தப் பகுதியில் இருந்த கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. தொடர்ந்து கல்வீசப்பட்டதால் போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.
மேலும் மங்களூருவில் பாண்டேஸ்வர், பந்தர், மிஷன் வீதி, பிபிஅலபி ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை துரத்தி, துரத்தி சென்று போலீசார் பிடித்து சென்றனர். நெல்லிக்காய் ரோடு பகுதியில் போராட்டக்காரர்கள் கூடி நின்று போலீசார் மீது கல்வீசி தாக்கினர். அத்துடன் ரோட்டில் ஒரு மோட்டார் சைக்கிளை இழுத்து போட்டு தீவைத்தனர். மேலும் அந்த ரோட்டில் பல இடங்களில் போலீசார் நுழையாமல் இருக்க டயர்களுக்கு தீவைத்தனர்.
தொடர்ந்து போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியபடி இருந்தனர். இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைந்து செல்லும்படி அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி துரத்திச் சென்றனர். நெல்லிக்காய் ரோடு பகுதியில் மட்டும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தன.
இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் மீது துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதனால் அவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதையடுத்து அவர்களை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
போலீஸ் விசாரணையில், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் மங்களூரு குத்ரோலி பகுதியை சேர்ந்த ஜலீல் (வயது 49), பெங்கரேயை சேர்ந்த நவுசின் (23) என்பது தெரியவந்தது. இந்த தகவலை மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் ஹர்ஷா உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பாண்டேஸ்வர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் நெல்லிக்காய் ரோடு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. கல்வீச்சு சம்பவத்தில் 16 போலீசாரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மங்களூரு நகர் முழுவதும் போலீசார் ரோந்து வாகனத்தில் சென்று, அமைதி காக்கும்படி எச்சரிக்கை செய்தபடி இருந்தனர். இருப்பினும் மங்களூரு நகரில் தொடர்ந்து பதற்றமும், பரபரப்பும் நீடித்து வருகிறது. இதனால் மங்களூரு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். வன்முறையில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே பாண்டேஸ்வர் பகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது நேற்று மாலை முதல் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு டவுன்ஹால் முன்பு நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. ‘கவுரி மீடியா டீம்’, ஏ.ஐ.சி.சி.டி.யூ., இடதுசாரி அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் என்று 100-க்கும் அதிகமானவர்கள் டவுன்ஹால் முன்பு திரண்டு தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல எழுத்தாளரும், வரலாற்று அறிஞருமான ராமசந்திர குகா, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரிஸ்வான் ஹர்சத் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
ஆனாலும் தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் டவுன்ஹால் நோக்கி குழுக்களாக படையெடுத்தனர். டவுன்ஹாலில் பதாகைகள் ஏந்தி போராட முயன்றவர்களையும், எஸ்.ஜே.பி. ரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
அதேபோல் பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளிலும் திரண்ட போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி அணிவகுத்து நின்றனர். இவர்கள் அனைவரையும் போலீசார் இழுத்துச் சென்று கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர்.
பெங்களூருவில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கும் சாம்ராஜ்பேட்டை, சிவாஜி நகர், பிரேசர் டவுன் உள்பட பல்வேறு இடங்களில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கலபுரகி மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று 144 தடை உத்தரவு அமலில் இருந்தாலும் கூட கலபுரகி நாகரேஷ்வரா பள்ளி முன்பு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள், ஆதிதிராவிடர் அமைப்புகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் என்று பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கலபுரகியில் நடந்த போராட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன. பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.
இதுதவிர கர்நாடகத்தில் உள்ள மைசூரு, ராய்ச்சூர், கதக், உப்பள்ளி, பெலகாவி, குடகு, உடுப்பி, உத்தரகன்னடா உள்பட பல்வேறு இடங்களில் முஸ்லிம் அமைப்பினர் மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
அவர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த 3 நாட்களாகவே கர்நாடகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடந்து வந்தது. நேற்று மங்களூருவில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததும், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானதும் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு மேற்கொள்ள போலீசாருக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், எடியூரப்பா கர்நாடகத்தில் அனைத்து மக்களும் அமைதி காக்கும்படியும், குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்கள் பயப்பட தேவையில்லை என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.