இந்திய குடியுரிமை சட்டம்: எடியூரப்பாவுடன் முஸ்லிம் மத குருக்கள் சந்திப்பு
இந்திய குடியுரிமை சட்டம் தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவை முஸ்லிம் மத குருக்கள் நேரில் சந்தித்து பேசினர்.
பெங்களூரு,
எடியூரப்பா கூறிய விளக்கத்தை ஏற்று, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த அமைதி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியுரிமை சட்டத்தை கண்டித்து பொதுமக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள். கர்நாடகத்திலும் நேற்று போராட்டம் வெடித்தது. மங்களூருவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கல்வீச்சு, துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறின. இதனால் மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் நேற்று என்.ஏ.ஹாரீஷ் எம்.எல்.ஏ. தலைமையில் முஸ்லிம் மத குருக்கள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது, இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் உள்ள அம்சங்கள் என்ன, தங்களுக்கு உள்ள சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அதற்கு எடியூரப்பா, குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், உங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது எனது பொறுப்பு என்றும், அதனால் முஸ்லிம் மக்கள் போராட்டம் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு என்.ஏ.ஹாரீஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “குடியுரிமை சட்டத்தை கண்டித்து நாளை (இன்று) அமைதி போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்திருந்தோம். இதற்கிடையே இந்த சட்டம் குறித்து முதல்-மந்திரியிடம் சில கேட்டோம். அவர், கர்நாடகத்தில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை என்று உறுதியளித்தார். அதனால் நாங்கள் அமைதி போராட்டத்தை ஒத்திவைத்து உள்ளோம். குடியுரிமை சட்டத்தில் முஸ்லிம்களை கைவிட்டது சரியல்ல. இது எங்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது“ என்றார்.