பெண்ணை கொலை செய்து நகை-பணம் கொள்ளை: டிரைவர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை - சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த டிரைவர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தது.;

Update: 2019-12-19 22:45 GMT
சென்னை, 

சென்னை லிங்கி செட்டி தெருவில் கதிஜா (வயது 59) என்ற பெண் தனது மகன் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். அவரது வீட்டில் டிரைவராக தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினத்தைச் சேர்ந்த செய்யது இப்ராகிம் என்பவர் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 9.9.2006 அன்று கதிஜா வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட செய்யது இப்ராகிம், தனது நண்பர்களான சென்னை எழும்பூர் டாக்டர் சந்தோஷ் நகரைச் சேர்ந்த வேலு, பெரியமேடு பரணிதரன் ஆகியோருடன் அங்கு சென்றார்.

பின்னர் அவர்கள் 3 பேரும், கதிஜாவை கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த 8 பவுன் நகை, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து கதிஜாவின் மகன் முகமது அப்சர் அளித்த புகாரின்பேரில் சென்னை கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்யது இப்ராகிம் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, சென்னை 7-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி டி.வி.அனில்குமார் முன்னிலையில் நடந்து வந்தது. போலீசார் தரப்பில் அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, செய்யது இப்ராகிம், வேலு, பரணிதரன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்கள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்