சென்னையில் பரபரப்பு சம்பவம்: ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு வந்த ரூ.52 லட்சத்துடன் டிரைவர் ஓட்டம்

சென்னையில் ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப கொண்டு வந்த ரூ.52 லட்சத்துடன் தப்பிச்சென்ற டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-12-19 22:45 GMT
ஆலந்தூர், 

சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரம்பும் பணியை செய்து வருகிறது. நேற்று மாலை இந்த நிறுவனத்தைச்சேர்ந்த மேற்பார்வையாளரான அசோக்நகரைச் சேர்ந்த வினோத்(வயது 28) தலைமையில் பணம் நிரம்பும் ஊழியரான கே.கே.நகரைச் சேர்ந்த வினோத்(26), துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ஊழியரான பீகாரைச் சேர்ந்த முகமது(27) ஆகியோர் காரில் வந்தனர். காரை வேளச்சேரியை சேர்ந்த அம்புரோஸ் (40) என்ற டிரைவர் ஓட்டினார்.

தேனாம்பேட்டையில் உள்ள 5 வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்பிவிட்டு, வேளச்சேரிக்கு ரூ.87 லட்சத்துடன் வந்தனர். வேளச்சேரி விஜயநகர் 1-வது பிரதான சாலையில் உள்ள விஜயா வங்கி ஏ.டி.எம். மையத்தில் நிரம்ப தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு மேற்பார்வையாளர் வினோத், ஊழியர் வினோத் ஆகியோர் இறங்கிச்சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக முகமது, துப்பாக்கியுடன் சென்றார்.

காரில் மீதம் ரூ.52 லட்சத்தை வைத்திருந்தனர். அப்போது எதிரே லாரி வந்ததால் காரை ஓரமாக நிறுத்துவதாக கூறி டிரைவர் அம்புரோஸ் காரை எடுத்துச்சென்றார். 3 பேரும் ஏ.டி.எம்.எந்திரத்தில் பணத்தை நிரம்பி விட்டு வந்தனர்.

ஆனால் சற்று தள்ளி காரை நிறுத்துவதாக கூறிய அம்புரோசையும், வாகனத்தையும் காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதி முழுவதும் தேடியும் அவரை காணவில்லை. அவரது செல்போனில் தொடர்பு கொண்டனர். அது ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. ரூ.52 லட்சத்துடன் கார் டிரைவர் அம்புரோஸ் தப்பிச்சென்றதை அறிந்தனர்.

இதுபற்றி வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வினோத் உள்பட 3 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்துடன் தப்பிச்சென்ற அம்புரோஸ், வேளச்சேரி முகவரியை தந்து உள்ளதால் அந்த முகவரிக்கு சென்றபோது அங்கும் அவர் இல்லை.

இதனால் பணத்துடன் அவர் எங்கு சென்றார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் வேளச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்