கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு; தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் விஷம் குடித்தார்
கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த தண்ணீர் குளம் கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 43). இவர் தே.மு.தி.க. திருவள்ளூர் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கு சுகந்தி (38) என்ற மனைவியும், சுமிதா, சுஜித்தா என்ற 2 மகள்களும், சூர்யா என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க. சார்பில் ரஜினிகாந்த் போட்டியிட முடிவு செய்தார். இதற்காக அவர் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தபோது அவர்களும் கூட்டணியில் இருப்பதால் தே.மு.தி.க.வில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு தருவதாக தெரிவித்தனர். இதனால் உற்சாகம் அடைந்த அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தான் தேர்தலில் நிற்கப்போவதாகவும் தனக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கூறி வந்தார். இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார். அவருக்கு 17-வது வார்டு புட்லூர் பகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் என்பதால் வேட்பாளர்களுக்கு போட்டியிட சின்னம் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் தனக்கான சின்னத்தை வாங்க ரஜினிகாந்த் தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் திருவள்ளூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு இருந்த அ.தி.மு.க நிர்வாகிகள் தற்போது தங்களுக்கு போட்டியிட அந்த இடம் வழங்கப்படவில்லை எனவும், அந்த இடம் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். பின்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரை அழைத்து அந்த இடத்தை மாற்றி 2-வது வார்டு ஆதிதிராவிடர் பொதுப்பிரிவில் வெள்ளியூர் பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுமாறு அறிவுறுத்தினர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தான் வைத்திருந்த எலி மருந்தை (விஷம்) குடித்தார். சற்றுநேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட கட்சி நிர்வாகிகள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.