சாலையோரங்களில் கழிவுகளை கொட்டினால் அபராதம் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சாலையோரங்களில் கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் சுதா தெரிவித்தார்.

Update: 2019-12-19 22:45 GMT
கரூர்,

கரூர் நகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. மேலும் டெக்ஸ்டைல் ஜவுளி ஏற்றுமதி, பஸ்பாடி, கொசுவலை உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை செங்குந்தபுரம், கோவைரோடு, தாந்தோன்றிமலை, ஜவகர்பஜார் உள்ளிட்ட இடங்களில் பரவலாக செயல்படுகின்றன. வீடுகள், தொழில்-வணிகநிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரமாகவும், மறுசுழற்சிக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து துப்புரவு பணி யாளர்களிடம் கொடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் கரூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

மக்காத குப்பைகள்

இதற்கு கரூர் நகராட்சி ஆணையர் சுதா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காய்கறிகள், பழங்கள், இலை-தழைகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகள் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் கூடத்தில் அரைத்து தூளாக்கப்பட்டு உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. டயர், பிளாஸ்டிக், இரும்பு, தகரம் உள்ளிட்ட மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மறுசுழற்சி செய்ய இயலாத மக்காத கழிவுகளில் எரியும் தன்மையுடைய பொருட்களை அரியலூரில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்டு தொழிற்சாலைக்கு பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கழிவுநீர்

கட்டிட இடிபாடு கழிவுகள் உள்பட கட்டுமான பணி கழிவுகளை தனியாக நகராட்சி மூலம் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் சேகரிக்கப்படுகிறது. எனவே ஆள் நடமாட்டமில்லாத இடமாக உள்ளதே? என நினைத்து நகரின் ஒதுக்குப்புறமாக உள்ள சாலையோரங்களில் கழிவுகளை யாரும் கொட்ட கூடாது. இது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர் களுக்கு குப்பை மேலாண்மை விதிப்படி அபராதம் விதிக்கப்படும். தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கழிவுநீர் அகற்றும் பணியின்போது போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கரூர் நகரில் உள்ள வணிக சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், குடியிருப்போர் நலசங்கத்தினர், ஜவுளி கடை உரிமையாளர்கள், டெக்ஸ்டைல் உரிமையாளர் சங்கத்தினர், கட்டிட பொறியாளர் சங்கத்தினர், தனியார் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்