கண்மாய், ஊருணி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி - விவசாய பணிகள் மும்முரம்
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெய்து வருவதால் கண்மாய் மற்றும் ஊருணிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை,
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் வறட்சி மாவட்டம் என்று அழைக்கப்படுவது உண்டு. அதற்கு காரணம் இந்த 2 மாவட்டங்களில் ஆண்டுதோறும் பெய்யும் பருவ மழை சரிவர பெய்யாததால் பல்வேறு இடங்களில் கடுமையான வறட்சியால் மக்கள் அவதியடையும் நிலை இருந்து வந்தது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இளையான்குடி, மானாமதுரை, சிவகங்கை, காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் குடிதண்ணீருக்கு கூட கடும் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி மக்களின் தேவைக்காகவும், ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தேவைக்காகவும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு அதன் மூலம் இந்த பகுதியில் வறட்சி காலங்களில் ஓரளவு மக்களுக்கு குடிதண்ணீர் பற்றாக்குறையை தீர்த்து வைக்க முடிந்தது. இந்த ஆண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்த மழை பெய்வதற்கு முன்பாக சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்மாய்கள், ஊருணிகள் ஆகிய நீர்நிலைகள் மராமத்து செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பி தற்போது எங்கு பார்த்தாலும் பசுமையாகவே காட்சியளித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதையடுத்து இப்பகுதி மக்கள் குடிதண்ணீர் பற்றாக்குறை வந்து விடுேமா என்று அஞ்சிய நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையினால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இது தவிர சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது. குறிப்பாக காரைக்குடி பகுதியில் உள்ள நாட்டார் கண்மாய், குடிக்காத்தன் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தான் நிரம்பியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சிடையந்துள்ளனர். மேலும் எப்போதும் வறண்ட பகுதியாகவே உள்ள இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் அந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகிறது. இதுதவிர வைகையாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் ஏற்கனவே பயிரிட்ட குறுகிய கால நெல் பயிர்கள் தற்போது விளைந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. இதனால் வரும் புத்தாண்டு இப்பகுதி மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.