நாகையில் உதவி தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

நாகை அருகே உதவி தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். குறியீடு போட்டு திருடும் மர்ம கும்பலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Update: 2019-12-19 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை வெளிப்பாளையம் கீழவீதியை சேர்ந்தவர் ஹரிராமன். ஆடிட்டர். இவரது மனைவி இளமதி(வயது 49). இவர், நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் உதவி தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவர்கள் நாகை வெளிப்பாளையம் கீழவீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

கடந்த 18-ந் தேதி இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர். அன்று மதியம் இளமதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை அருகில் வசிப்பவர்கள் பார்த்து விட்டு அவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.

15 பவுன் நகைகள் திருட்டு

இதையடுத்து இளமதி உடனடியாக தனது வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை காணவில்லை. இதனை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசில் இளமதி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

இளமதி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு நுழைவு வாயில் சுவற்றில், பென்சிலால் சில அடையாளங்கள் போடப்பட்டிருந்தது. மேலும் இளமதி வீட்டின் சுவற்றிலும் அதே குறியீடு போடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், குறியீடுகளை பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உதவி தாசில்தார் இளமதி வீட்டில் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

குறியீடு போட்டு திருட்டு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிப்பாளையம் ராமர் மடம் பகுதியில் வசிக்கும் தலைமையாசிரியர் இளமாறன் என்பவர் பணிக்கு சென்று இருந்தபோது அவரது வீட்டில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். அப்போது அவர்களது வீட்டின் முகப்பு பகுதி சுவற்றில் இதேபோல் குறியீடுகள் போடப்பட்டிருந்தது.

தற்போது உதவி தாசில்தார் இளமதி வீட்டின் சுவற்றில் போட்டிருந்த குறியீடுகளும், இளமாறன் வீட்டின் சுவற்றில் போட்டிருந்த குறியீடுகளும் ஒன்றாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் திருடிச்செல்வது தெரிய வந்தது.

மேலும் செய்திகள்