நெல்லை அருகே பரபரப்பு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் தற்கொலை
நெல்லை அருகே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மானூர்,
நெல்லை மாவட்டம் தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் உதயகுமார் (வயது 56). இவர் மானூர் அருகே உள்ள ராமையன்பட்டி போலீஸ் காலனியில் குடியிருந்து வந்தார். இவருடைய மனைவி மரகதம் (52). இவர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஹரிணி என்ற மகளும், செல்வசுந்தர் என்ற மகனும் உள்ளனர். ஹரிணிக்கு திருமணம் ஆகிவிட்டது. செல்வசுந்தர் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் உதயகுமார் முதுகுதண்டு வலி, ரத்தக்குழாய் அடைப்பு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். மேலும், விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்காததால் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 11-ந்தேதி முதல் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் மரகதம் பணி நிமித்தமாக கோவில்பட்டிக்கு சென்று விட்டார். இதனால் நேற்று காலை உதயகுமாரும், அவருடைய மகள் ஹரிணியும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்ற உதயகுமார் திடீரென்று தூக்குப்போட்டு கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹரிணி கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் உதயகுமாரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உதயகுமாரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மரகதம் மானூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.