கடலூரில், சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
கடலூரில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடலூர்,
கடலூர் கோண்டூர் உண்ணாமலை செட்டிச்சாவடியை சேர்ந்தவர் வீரப்பன். இவருடைய மகன் சீனுவாசன் (வயது 40). வெல்டிங் தொழிலாளி. இவருக்கும் இவரது வீட்டின் பக்கத்தில் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டிய ஒருவருக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்து வந்தது. இதையடுத்து புறம்போக்கு இடத்தில் வசித்தவர், அந்த வீட்டை காலி செய்து விட்டார்.
இதனால் அந்த வீடு பராமரிப்பு இன்றி மேற்கூரை சரிந்து விழுந்து விட்டது. சுவர்கள் மட்டும் இருந்தது. அதிலும் சில சுவர்கள் இடிந்து விழுந்து விட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதில் உள்ள சுவரின் ஒரு பகுதியை சீனுவாசன் குடிபோதையில் இடித்து தள்ளினார்.
அப்போது அந்த சுவர் இடிந்து அவர் மேல் விழுந்தது. இதில் சிமெண்டு சிலாப் ஒன்று அவரது தலையில் வெட்டியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த சீனுவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி அவரது மனைவி கயல்விழி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக சிமெண்டு சிலாப் விழுந்தது, சீனுவாசன் உடலில் அரிவாளால் வெட்டியது போல் காயம் இருந்ததால், அவரை முன்விரோத தகராறில் சிலர் வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என்று தகவல் பரவியது. ஆனால் போலீசார் விசாரணை நடத்திய பிறகே, சிமெண்டு சிலாப் தலையில் வெட்டி அவர் இறந்தது தெரிய வந்தது. இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.