கடையநல்லூர் யூனியன் பகுதி கிராமங்களில் தென்காசி கலெக்டர் ஆய்வு
கடையநல்லூர் பஞ்சாயத்து யூனியன் பகுதி கிராமங்களில் நேற்று தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு மேற்கொண்டார்.
அச்சன்புதூர்,
தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று கடையநல்லூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு சென்றார். அந்த யூனியன் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டார். பின்னர், அந்த அலுவலக வளாகத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டி முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று அவர் ஆய்வு செய்தார். அந்த அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்ட அவர், நயினாகரம் கிராமத்திற்கு உட்பட்ட எவரெஸ்டு நகரில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மின் மோட்டாருடன் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
அந்த பகுதியில் உள்ள குளத்துக்கான வரத்துக்கால்வாய் தடுப்பணை பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அங்கிருந்து துரைசாமிபுரம் சென்ற அவர், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அப்பகுதியில் நடைபெற்ற பணியை பார்வையிட்டார். அங்கு பணியாற்றிய பணியாளர்களின் அடையாள அட்டைகளை வாங்கி, அவர் எத்தனை பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள் என்பதை கணக்கிட்டார்.
பின்னர், நயினாரகரம் ஊரணி, ஊர்மேல் அழகியன் சத்துணவு கூடம், வள்ளியம்மாள்புரத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3 லட்சத்தில் நடைபெற்று வரும் பஸ் நிறுத்தம், கொடிக்குறிச்சியில் அங்கன்வாடி மையம் மற்றும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
இந்த ஆய்வின் போது கலெக்டருடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிக்கந்தர் பீவி, சக்தி அனுபமா, என்ஜினீயர்கள் சாகிராள் பானு, மகாதேவன் மற்றும் பலர் உடனிருந்தனர்.