குன்னூர் சிம்ஸ் பூங்காவில் முதல் சீசனுக்காக, மலர் நாற்று நடவுக்கு நிலம் தயார் செய்யும் பணி தீவிரம்
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் முதல் சீசனுக்காக மலர் நாற்று நடவுக்கு நிலம் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குன்னூர்,
குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களில் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் உள்ளதாக விளங்குகிறது. தோட்டக்கலைத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த பூங்கா ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது. சிம்ஸ் பூங்காவில் மலர் செடிகள் மட்டுமின்றி ஆங்கிலேயர் காலத்தில் நடவு செய்யப்பட்ட நூற்றாண்டு பழமைவாய்ந்த அபூர்வமான மரங்கள் உள்ளன.
இதில் ருத்ராட்ச மரம், காகித மரம், யானைக்கால் மரம் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது. ஆண்டுதோறும் முதல் மற்றும் 2-ம் சீசனுக்கு பூங்காவில் புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன.
தற்போது 2-வது சீசன் முடிவுற்ற நிலையில் வருகிற 2020-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசன் தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து 2-வது சீசனுக்காக நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளை அகற்றிவிட்டு புதிய மலர் நாற்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டது.
அதன்படி மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நிலம் சமன் செய்யப்பட்டு பாத்திகள் அமைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணி முடிவுற்றவுடன் வருகிற ஜனவரி மாதத்தில் புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யப்படும் என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.