விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கக்கோரி, ஆமூர் கிராம மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம்
விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கக்கோரி ஆமூர் கிராம மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் 2 கிராமத்தினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினார்கள்.
அரசூர்,
விழுப்புரம் மாவட்டம் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதில் விழுப்புரத்திற்கு மிக அருகில் உள்ள சில கிராமங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்கள் கிராமத்தை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தியும் ஆமூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் நேற்று காலை கஞ்சி காய்ச்சி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்றையும் சிறைபிடித்து அவர்கள் போராட்டம் செய்தனர்.
அப்போது தங்கள் கிராமத்தில் இருந்து விழுப்புரம் மிக அருகில் உள்ளதால் தங்கள் கிராமத்தை திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் சேர்த்து விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் பஸ்சை விடுவித் தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து, காலையில் இருந்து மாலை வரை போராட்டம் நடத்திவிட்டு அதன் பிறகு அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதேபோல் ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் கிராமத்தை திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கக்கோரி டி.கொளத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். மேலும் அவர்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி வைத்துள்ளனர். மேலும் கொண்டசமுத்திரம் கிராமத்திலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.