சட்டசபையில் குடியுரிமை சட்டம் குறித்து பேசிய அனைத்து கட்சியினர் கருத்துகளும் அவை குறிப்பில் இருந்து நீக்கம்

மராட்டிய சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி அரசியலமைப்புக்கு விரோதமாக பேசிய அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளையும் அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.

Update: 2019-12-18 23:31 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு நாளில் வீர சாவர்க்கர் பற்றிய ராகுல்காந்தியின் சர்ச்சை பேச்சு மற்றும் மராட்டியத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் ஆகிய பிரச்சினைகளை மையப்படுத்தி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் சட்டசபையின் இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், 3-வது நாளான நேற்று சபை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான் மராட்டியத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த கூடாது என்று வலியுறுத்தினார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை மாநில அரசாங்கம் அமல்படுத்தாமல் இருக்க முடிவெடுக்க முடியாது என்றார்.

பாரதீய ஜனதாவின் சுதீர்முங்கண்டிவார் பேசுகையில், ஜனாதிபதி, நாடாளுமன்றம், சபாநாயகரின் முடிவுகள் மீது சட்டசபை உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறினார். ஆனால், இதற்கு முன் இந்த சபை பயங்கரவாத தடுப்பு சட்டம் (பொடா) குறித்து விவாதித்து உள்ளது என தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவாத் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமின் பட்டேல் பேசுகையில், குடியுரிமை சட்டம் இந்து அல்லது முஸ்லிம் பற்றியது அல்ல. இது ஏழை, பணக்காரர்கள் பற்றியது. இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்றார்.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பிறகு, குடியுரிமை சட்டம் தொடர்பாக அரசியலமைப்புக்கு விரோதமாக பேசிய அனைத்துகட்சியினர் கருத்துகளை அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் நானா பட்டோலே அதிரடி உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக இந்த விவாத்தின் போது, அமளி காரணமாக சபை இரண்டு முறை 10 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே மாநில அரசு விவசாய விரோத கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறி சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் செய்திகள்