விபத்தில் சிக்கி காலை இழந்தார்: புதுவையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி நிச்சயிக்கப்பட்டவரை கரம் பிடித்த மணப்பெண்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி காலை இழந்தார். அதனால் மணமகளின் பெற்றோர் திருமணத்தை நிறுத்த, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவரையே மணமகள் திருமணம் செய்தார்.

Update: 2019-12-18 22:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி சாரம் அய்யப்பன் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகள் பிரகதி. நேரு வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் மரக்காணம் கழிக்குப்பத்தை சேர்ந்த வேல்முருகன் (வயது 30) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிச்சயம் செய்யப்பட்டது.

அதன்பின்னர் வேல்முருகன் எதிர்பாராமல் ஒரு விபத்தில் சிக்கினார். இதில் அவருடைய இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த காலை அவர் இழக்க நேரிட்டது.

திருமணத்தை நிறுத்திய பெற்றோர்

அதனை மணமகளின் பெற்றோர் அபசகுனமாக கருதினர். அதனால் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தினர். ஆனால் அவர்களின் மகள் பிரகதி, நிச்சயிக்கப்பட்டபடி நான் வேல்முருகனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருந்தார்.

ஆனால் அதனை ஏற்காத அவருடைய பெற்றோர் பிரகதிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி வேலைக்கு சென்ற பிரகதி பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் வேல்முருகனுடன் திருப்பதி சென்று அங்கு அவரை திருமணம் செய்து கொண்டார்.

போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

இதற்கிடையே பிரகதியின் பெற்றோர் கடந்த 14-ந் தேதி முதல் தனது மகளை காணவில்லை என்று பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதுபற்றி அறிந்ததும் புதுமண தம்பதி வேல்முருகன்-பிரகதி ஆகியோர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பெரியகடை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் பிரகதியின் பெற்றோரை அழைத்து பேசி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்